மகனே எழுந்து விடு.
எழுதிடும் வசமே எழுத்து வரும்.
தொழுதிடும் சாமி துணை வரும்.
உழுதிடும் நிலமே உணவு இடும்
அழுதிடும் மகனே எழுந்து விடு.
தடமிடத் தானே பாதை வரும்.
கடந்திடத் தானே ஊரு வரும்.
உழைத்திடத் தானே வரவு இடும்.
கலங்கிடும் மகனே கவலை விடு.
அறிந்திடும் மனமே அறிவு பெறும்.
புரிந்திடும் குணமே .புலமை பெறும்.
தெளிந்திடும் அறிவே தீர்வு இடும்.
குழம்பிடும் மகனே கலக்கம் விடு.
தேடிடும் பொழுதே கூடி வரும்.
நாடிடும் பொருளே தேடி வரும்.
முயன்றால் முடிவு முந்தி இடும்
அயர்ந்திடும் மகனே அயர்வு விடு.
வண்ணம் பலவும் வரைய வரும்.
வரைய வரைய வடிவம் வரும்.
எண்ணம் அழகினை எழுதி இடும்.
திண்ணம் மகனே தேர்ந்து விடு.
இடிந்த கோவிலும் எழுந்து வரும்.
முடிந்த முன்வினை தொடர்ந்து வரும்.
படிந்து எழுவது பண்பு இடும்.
படிக்கும் மகனே பழகிவிடு.
தீயோர் கூட்டம் ஓடி வரும்.
நேயம் பாடி கூட வரும்.
வாயில் திறந்தால் வரிசை இடும்.
நோவது மகனே தள்ளி விடு.
பாவ வினைகள் பற்ற வரும்.
கூவம் போலவே நாற்றம் வரும்.
பாவியர் பார்வை பாவம் இடும்.
பாராது மகனே விலகி விடு.
கொ.பெ.பி.அய்யா.
http://ayyavinkavithai.blogspot.in/
