Sunday, 21 December 2025

இன்னொரு சுதந்திரம்.




இன்னொரு சுதந்திரம்.

நாட்டுப் பற்று வாக்காளனுக்கு
வீட்டுப்பற்று வேட்பாளனுக்கு
ஒட்டுப்பற்று ஊழலுக்கு.

வெக்கமில்லை அரசியலுக்கு.
விபரமில்லை மக்களுக்கு.
விளக்கமில்லை தேர்தலுக்கு.

கோழி கூவப் போவதில்லை.
கோழை ஏவப் போவதில்லை.
காலம் விடியப் போவதில்லை.

சொன்ன சொல் நினைப்பதார்?
முன்னை வினை எண்ணுவதார்?
பண்ணும் செயல் தெளிவதார்?

நாட்டுக்கான கட்சி உண்டோ?
நட்ட கொள்கை நிலையுண்டோ?
கோட்டையன்றி வேறுண்டோ?

ஓட்டுக்குத்தான் நீ வேணும்.
ஓடி வந்து தான் காணும்.
உன்னைப் பின்னே யார் பேணும்?

சொல்வதெல்லாம் பொய்யன்றி
கொள்வதெல்லாம் வேடமன்றி
நல்லதில்லை சுரண்டலின்றி.

சொந்தங்களும் சொத்துக்களும்
சுகமாக வாழ்வதற்கும்
தொண்டனே காவலாம்.

பொறுத்தார் பூமியாள்வார்
பொங்கினார் காடாள்வார்
பாவிகளே நாடாள்வார்.

வேறென்ன செய்யலாம் மந்திரம்?.
விதியென்ன மாற்றலாம் எந்திரம்?
வென்றெடு இன்னொரு சுதந்திரம்..

கொ.பெ.பி.அய்யா.






ஈழத்தின் ஆவிகள்.

ஈழத்தின் ஆவிகள் பேசுகின்றன.
நாடகக்காரர்களை நம்பும் நிலை இதுதான்.பாவம்! இன்றுணர்ந்த
ஆவிகள் நாங்கள் அன்றே அவர்களைப் பற்றி விசாரித்திருந்தால்.இத்தனை இழப்பு ஒருவேளை நிகழாமல் நிலைமையும் சரியாகி இருக்கலாம்.
காப்பேன் காப்பேன் எனக்கூறி ஒரேஅடியாகக்கவிழ்த்துவிட்டார்கள்
எல்லாம் முடிந்து இப்போது இழவு வீட்டில் நீலிக்கண்ணீர் வடித்து 
நடிக்கிறார்கள்.தலைவன் செத்தவீட்டில் அடுத்த தலைவன் நானே 
என்று இழவு வீட்டாரையே அவர்கள் வாயால் அறிவிக்கசெய்யும் 
தந்திரக்கரர்கள் இவர்கள்.புயல் ஓய்ந்த பின் பிணங்களில் ஒட்டிக் 
கொண்டிருக்கும் காதணிகளைக் கழட்டிக்கொண்டிருக்கிரார்கள் 
பாவிகள்.இவர்கள் எப்போதும்போல் இப்போதும் சும்மா இருந்தாலே மிஞ்சி இருப்பவர்களாவது ஆவிகளாகாமல் மிஞ்சுவார்கள்.

தாய் மனசே

புறிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!
காலம் விடியட்டும் என்மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்  
கேளு அன்பு மகனே!
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனி நீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி
படு வதும் ஏன் மகனே கூறய்யா!
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?
எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே

கொ.பெ.பி.அய்யா

Saturday, 20 December 2025

வீடு ஒரு கனவு.

வீடு

வீடு..... அதுதான்
அனைவரது கனவு.
சொந்தமாக ஒரு வீடு
அதுதானே சுகம்
சுதந்திரம் எல்லலாமே.

வாடகை வீடு..........
வசதிகள் கரைகிறது.
ஆனால்.............................
வாடகை மட்டும்
 வருடா வருடம் ஊதுகிறது.
மின்சார கட்டணமோ!
அது ஒரு......................
குட்டி வாடகை.
மற்றும் முறைவாசல்
தண்ணீர்க்கென
இப்படி எத்தனையோ
துணை வாடகைகள்.

சட்டமன்றங்களில்
எதையெதையோ
பேசுகிறார்கள்--ஆனால்
இதைமட்டும் பேச
அஞ்சுறார்கள்.
ஓட்டு வங்கியைக்
கணக்குப் போட்டு
ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆளுக்கு ஒரு
வீடு என்கிறார்கள்.
ஆனால் அதுவும்
அரசியல்வாதிகளுக்கே
அலாட்டாகி விடுகிறது.
ஏழையைக் காட்டிப்
பேசுகிறார்கள்.--ஆனால்
பிழைப்ப தெல்லாம்
பெரியவர்கள்தான்.
அன்றாட உழைப்பு
அரை வயிற்றுக்கும்
போதவில்லை.

மையானத்தில்கூட
இடமில்லை.
மைதானங்களும்
காலி இல்லை.
அவரவர் ஆட்சியில்
அவரவர் வளைத்துக்
கொண்டார்கள்.

விலைவாசியோ
விண்ணை  முட்டுகிறது.
நிலம் என்பதோ
நித்தரையிலும்
தோன்றவில்லை
உறக்கமும் தொலைந்தது
ஓய்வெடுத்தால்
கஞ்சியில்லை.
மனைகளோ!
இலட்சங்கள் கோடிகள்.

விலங்குக்குக் குகையுண்டு
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
தொழுவம்  உண்டு
கோழிக்கும் கூண்டுண்டு.
பறவைக்கும் கூடுண்டு..
ஆனால் மனிதனுக்கு.................!

.வீடு ..................!.அது
ஒரு கனவு.



கொ.பெ.பி.அய்யா






Friday, 19 December 2025

மணமகனே

மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!
மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!


தனமிருக்கும் பணமிருக்கும் அந்த நாட்டில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் இந்த நாட்டில்.
நாஉரையும் நாடகம்தான் சென்ற நாட்டில்—மெய்
நாநயமும் நேர்முகமும் சொந்த நாட்டில்

(மணமகனே)மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!

கற்ற பாடம் உற்ற நடை நாடு நமது வீடு--நெஞ்சில்
மற்றவரை கணம்மதித்து வாழும் அழுகு கூடு.
நல்லவர்கள் நண்பராக தேடும் பண்பாடு.---உறவில்
பச்சமுடன் பாச மணம் வீசும் நேசமேடு.

ஆபரணம் காவரணும் சிறப்பிருக்காது.—திருமணம்
ஆகவரும் மாப்பிளைக்கும் குறைவிருக்காது  
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—இருமனம்
கண்ணாலும் உண்பதற்கும் புளிப்பிருக்காது
மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!

Monday, 15 December 2025

மனிதன் மாறவேண்டும்.


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Saturday, 13 December 2025

இரங்கல் பா

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.