தீரன் சின்னமலை.
கண்மணி பாப்பா கதையாகக் கேளு
பொன்மணிப் பாரதம் பூக்க யாரு?
தீரன் வீரன் தென்னாட்டுச் சூரன்
தீர்த்த கிரிதரன் சின்ன மலைதான்.
்
ஈரோட்டுப் பெருமை பேராம் காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தான் ஆண்சிங்கம் தீரன்.
ரத்தின சாமிக் கவுண்டர் பெரியாத்தா
புத்திரன் தீரன் சின்ன மலைசாஸ்தா
அட்டியன் தொட்டன் ஆண்ட பரம்பரை
கெட்டித் தீர்த்தன் சின்னன் பெரும்படை.
ஒன்னம்மாள் திண்ணமாம் கருணை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணம் திறனை
முன்னவர் அருமை பன்னிய அறனை.
வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சாப் போரன்.
எங்கோ எவர்க்கோ எதற்கினி கிஸ்தி!
எங்கள் மக்கள் ஏற்புடை ஆஸ்தி
பறித்தான் வரிப்பணம் ஏழையர் பகிர
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.
எவனெனக் கேட்டால் இவனெனக் கூறு
சிவமலை சென்னிக்கு இடையே ஊரு
சின்ன மலைதான் மன்னவன் பேரு
எவர் இனித்துணிவார் எதிரெவர் யாரு.
அனைத்து இனமும் அணைத்து ஆண்டு
இணைத்து வலிமையிற் செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டான்
பகைஞர் படை வென்று முடித்தான்.
கொள்ளை வெள்ளை இல்லாதாக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்துத் தொல்லை எதிர்த்து
தில்லில் சரித்திரம் மல்லிற் பதித்தான்.
மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைதிடத் தீரனைக் கண்ணி விரித்தார்.
கப்பம் வேண்டிக் காலடி பணிந்தார்.
ஓப்பம் செய்தே கீழடி குனிந்தார்.
பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையன் ஓடா நிலையில்
கோடு அமைத்தான் கோட்டை அரணில்.
பற்றி அன்னியர் படையைத் துணிந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான இரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!
வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லன் அருந்ததி
வல்லான் உதவி கொண்டான் பெருமுடி.
நேராய் எதிர்த்துப் போராய் முடிக்க
தீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.
மறைந்து தாக்கவே பதுங்கிய பழனி
நிறைந்து காக்கவே விளங்கிய தீரன்
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான்சூதன் நல்லனால்
காட்டிக் கொடுத்த நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான்.
பேரால் என்ன புரிந்தும் நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்தும் வாழலாம்?
எங்கோ பிறந்து இங்கே நுழைந்தான்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தான்
ஒற்றுமைக் குலைய உறவு கலைத்தான்
குட்டுப் பட்டே குறுகிக் கிடந்தோம்.
ஒற்றுமை மறந்து உரிமை துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
உற்றது தாய்மொழிப் பற்றது குறைந்து
மற்றவர் எள்ளி பழித்தது கோலம்.
கொலைப் பழிசுமத்தி தீரன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறிய மல்லன் தமிழனை
தலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
பிழைத் தீரேற்றி நேரந்தன் தூக்கினை.
சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையில் சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!
சரணம் என்பது சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பது மறவர்க்கு இல்லை.
வீரம் விளைய விதையாப் புதைவான்
தருணம் துடித்து காலத்தில் எழுவான்.
உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரது உணர்வு விளைய விதைத்தான்
சுதந்திரத் தீயை முதலாய் ஏற்றினான்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.
எரிமலைக் குமுறல் எவர்தான் தடுப்பார்
இயற்கைத் திமிர் எவர்தான்கெடுப்பார்.
புலவன் ஒருவன் புலபல் வெடித்தான்
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தான்.
சின்னமலை எண்ணப் பெருமையோ!
கண்ணால் சிலைக் காண அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சிப் புகழென வாழ்கவே!
சுதந்திரக் காற்று சுவாச முதல்வன் தீரன்
உதிக்கப் பாரதம் விதை சின்னமலை
ஒற்றுமை ஒருமை உரமெனத் தீரன்
பெற்ற சுதந்திரம் பேணிடச் சொல்வான்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.