Sunday 30 March 2014

இன்னொரு சுதந்திரம்.




இன்னொரு சுதந்திரம்.

நாட்டுப் பற்று வாக்காளனுக்கு
வீட்டுப்பற்று வேட்பாளனுக்கு
ஒட்டுப்பற்று ஊழலுக்கு.

வெக்கமில்லை அரசியலுக்கு.
விபரமில்லை மக்களுக்கு.
விளக்கமில்லை தேர்தலுக்கு.

கோழி கூவப் போவதில்லை.
கோழை ஏவப் போவதில்லை.
காலம் விடியப் போவதில்லை.

சொன்ன சொல் நினைப்பதார்?
முன்னை வினை எண்ணுவதார்?
பண்ணும் செயல் தெளிவதார்?

நாட்டுக்கான கட்சி உண்டோ?
நட்ட கொள்கை நிலையுண்டோ?
கோட்டையன்றி வேறுண்டோ?

ஓட்டுக்குத்தான் நீ வேணும்.
ஓடி வந்து தான் காணும்.
உன்னைப் பின்னே யார் பேணும்?

சொல்வதெல்லாம் பொய்யன்றி
கொள்வதெல்லாம் வேடமன்றி
நல்லதில்லை சுரண்டலின்றி.

சொந்தங்களும் சொத்துக்களும்
சுகமாக வாழ்வதற்கும்
தொண்டனே காவலாம்.

பொறுத்தார் பூமியாள்வார்
பொங்கினார் காடாள்வார்
பாவிகளே நாடாள்வார்.

வேறென்ன செய்யலாம் மந்திரம்?.
விதியென்ன மாற்றலாம் எந்திரம்?
வென்றெடு இன்னொரு சுதந்திரம்..

கொ.பெ.பி.அய்யா.






Saturday 29 March 2014

வெறுங்கூச்சல்.

வெறுங் கூச்சல்.

கருப்பு அயல் வங்கிகளில்
இருளில் ஏழை குடிசைகள்.
பாவம் ஜனநாயகம்.

புளிச்சேப்பம் பணக்காரனுக்கு.
பசியேப்பம் ஏழைக்கு.
சுதந்திரம் யாருக்கு?

பெட்டிப்பணம் தேர்தலில்
கொட்டுவது சீமான்கள்.
கூலிதான் ஏழைக்கு.

ஏழைக்கு ஏணி என்பான்
ஏறுவான் கொழுத்தவன்.
இதுதான் இந்தியா.

வரிச்சலுகை முதலாளிக்கு மொத்தமாய்.
வாக்குவங்கி ஏழைக்கு இலவசமாய்
வாக்கரிசி மட்டுமாய்.

வெறுங்கூச்சல் வேட்டிசேலைத் தேர்தலே
வந்து நீ கிழிப்பதென்ன வாழ்விலே
வெட்டிவேலை வேறென்ன ஏழைக்கு?

கொ.பெ.பி.அய்யா.