Sunday 25 May 2014

சண்டாள ஈழன்.

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
அதிலும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.