Friday 14 November 2014

தீரன் சின்னமலை.


தீரன் சின்னமலை.

கண்மணி பாப்பா கதையாக நீகேளு
பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?
தீரன் வீரன் தென்னாட்டு சூரன்
தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை
கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை.

ஒன்னம்மாள் கருணை திண்ணமாய் உரனை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணமாய் திறனை
முன்னவர் அருமை பண்ணினான் அறனை.

வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.

எங்கோ எவர்க்கோ எதற்கினி வரிப்பணம்
இங்கே இவர்க்கே அதுஇனி உரிப்பணம்.
பறித்தான் அதனை பகிர்ந்தனர் ஏழை.
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.

எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லன்
சிவனுக்கும் சென்னிக்கும் இடையென மல்லன்
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்
என்னவர் பிழைப்பெதிர் இன்னெவர் தில்லன்

அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான்.
பகைஞர் படைகொன்று தடைவென்று முடித்தான்.

கொள்ளையன் வெள்ளையன் இல்லையன் ஆக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்து தொல்லை எதிர்த்தான்.
இல்லை சரித்திரம் சொல்முன் பதித்தான்.

மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைவேல் தீரனை கணக்கிடத் துணிந்தார்.
கப்பம் வேண்டியே காலடி பணிந்தார்.
வெப்பம் சீண்டியே கீழடி குனிந்தார்.

பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையவன் ஓடா நிலையில் 
கோடாய் அமைத்தான் கோட்டை அரணில்.

பற்றி அன்னியர் படையினை அணைந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான ரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!

வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லவன் அருந்ததி
வல்லான் அவன்வழி வாழட்டும் பெரும்பதி.

நேராய் எதிர்த்து போராய் முடிக்க
வீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.

மறைந்து தாக்கவே பதுங்கிய பழனிமலை
நிறைந்து காக்கவே விளங்கிய சின்னமலை
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான் சிறியன் நல்லனால்.

காட்டிக் கொடுத்தவன் நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான் என்பான்.
பேரால் என்ன புரிந்து நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்து வாழலாம்?

எங்கோ பிறந்தவன் இங்கே நுழைந்தவன்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தவன்
ஒற்றுமை குலைத்தவன் பற்றினை மறைத்தவன்
கொட்டிய கொடுமையில் குறுகிக் கிடந்தொமோ!

ஒற்றுமை மறந்தோம் உரிமையைத் துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
ஒற்றொரு புள்ளி உலகில் சின்னவன்
பற்றிய எள்ளி பழிக்கும் காலம்.

கொலைப்பழி கூறி கொற்றவன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறி நட்டவன் தமிழனை
விலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
நிலைக்கழி ஏற்றி நேரந்தான் தூக்கினை.

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!

சரணம் என்பதும் சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பதும் மறவர்க்கு இல்லை
தருணம் எதிர்த்து விதைஎனப் புதைவான்
கரணம் துடித்து காலத்தில் எழுவான்.

உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரை உணர்வாய் உலகில் விதைத்தான்
சுதந்திரத் தீயை முதலாய் வளர்த்தவன்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.

எரிமலைக் குமுறலை எவர்தான் தடுப்பார்
இயற்கையின் திமுறலை எவர்தான் கெடுப்பார்.
புலவர் குழந்தை புண்ணியன் வெடித்தார்
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தார்.

சின்ன மலையனை எண்ணுதும் பெருமையோ!
கண்ணால் சிலையாக காண்பதும் அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சியார் புகழென வாழ்கவே!

சுதந்திரக் காற்றின் சுவாச முதல்வன்---.சின்னமலை.
உதிக்கப் பாரதம் விதைத்தான் தன்னுயிர்--சின்னமலை.
ஒற்றுமை ஒன்றே உரமெனச் சொல்வான்---சின்னமலை.
பெற்ற சுதந்திரம் பேணச் சொல்வான் ---சின்னமலை.

கொ.பெ.பி.அய்யா.