Friday 20 June 2014

மனிதன் மாறவேண்டும்.


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Thursday 5 June 2014

உழவும் எழுத்தும்.


மகனே எழுந்து விடு.

எழுதிடும் வசமே எழுத்து வரும்.
தொழுதிடும் இடமே துணையும் வரும்.
உழுதிடும் நிலமே உணவு இடும்
அழுதிடும் மகனே எழுந்து விடு.

பழகிடத் தானே பாதை வரும்.
உலவிடத் தானே ஊரு வரும்.
வழிவிடத் தானே வரவு இடும்.
கலங்கிடும் மகனே கவலை விடு.

அறிந்திடும் மனமே அறிவு வரும்.
புரிந்திடும் குணமே .புலமை வரும்.
தெளிந்திடும் அறிவே தீர்வு இடும்.
குழம்பிடும் மகனே கலக்கம் விடு.

தேடிடும் பொழுதே கூடி வரும்.
நாடிடும் பொருளே தேடி வரும்.
முயன்றால் முடிவு முந்தி இடும்
அயர்ந்திடும் மகனே அவலம் விடு.

வண்ணம் பலவும் வரைய வரும்.
வரைய வரைய வடிவம் வரும்.
எண்ணம் அழகினை எழுதி இடும்.
திண்ணம் மகனே தேர்ந்து விடு.

இடிந்த கோவிலும் எழுந்து வரும்.
முடிந்த முன்வினை தொடர்ந்து வரும்.
படிந்து எழுவது பண்பு இடும்.
படிக்கும் மகனே பழகிவிடு.

தீயோர் கூட்டம் ஓடி வரும்.
நேயம் பாடி கூட வரும்.
வாயில் திறந்தால் வரிசை இடும்.
நோயது மகனே தள்ளி விடு.

பாவ வினைகள் பக்கம் வரும்.
கூவம் போலவே சீக்கும் வரும்.
பாவியர் இரக்கம் பாவம் இடும்.
படட்டும் மகனே பாவம் விடு.

கொ.பெ.பி.அய்யா.





http://ayyavinkavithai.blogspot.in/