Thursday 14 August 2014

உரிமை நாள்.



உரிமை நாள்!

வெந்தணல் பூத்த விளைவாயெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ்சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளையரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.

இந்தியக் கண்டம் இந்தியாவென்று—புதிய
இரண்டாம் பிறப்பு நாளின்று.
இன்றுன் வயதும் அறுபத்தேழோ!—இளமை
இந்தியத் தாயே நீ வாழ்க!

கருணைக் கடலெனச் சிறந்தன்றுஇயற்கை
அருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமைக் குரலது உயிரெனக்கொண்டுதுடிக்கும்
உதிரம் கொட்டியும் ஒலித்தாய்நின்று..

தாயே என்னும் பந்தமுண்டுஅன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்றுபண்பின்
பெருமை சொன்னது நீயென்று...

புரட்சி என்றொரு சொல்லுண்டுஅதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
வளர்ச்சி என்ற முயற்சிகொண்டு—ஒற்றுமை
வலிமை பெற்றதால் பலனுண்டு.

சுதந்திரம் முயன்று பெற்றதுண்டுஅதுவே
சுயநல வளற்சி ஆனதின்று.
ஜனநாயகம் அதுதான் உயிரென்றுஉலகின்
சரித்திர அடையாளம் போனதின்று..

பொதுவாழ் வென்ற பேச்சுண்டுஆனாலது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டுசாணக்ய
அர்த்த சாஸ்திரம் எதிர்கொண்டு.  

அரசியலொரு தர்ம மென்றுஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அந்த அரசியல் வணிகமென்றுஅய்யோ
அழகு மாறிப் போனதின்று.

நவயுகம் வார்த்தை நலமுண்டுஅதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்றுகணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று. 

காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டுஅவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதநாடும் ஒருநாள் ஆவதுண்டு.அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.

வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.

எனக்கும் கூடஓர் ஆசையுண்டுஅதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டுஅந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
. 
கொ.பெ.பி.அய்யா.



  




Wednesday 6 August 2014

உன்னையே தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?
வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்
மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!


கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.