Friday 4 April 2014

கண்ணாடி.

கண்ணாடி

கண்ணாடி என்னதான்  சொல்லுது?
முன்னாடி உண்மைதான் காட்டுது.
ஒன்பதும் உன்னிடம் இருக்குது.
என்பதும் எண்ணிட விளக்குது.

அகத்தினில் உள்ளதை வரையுது
முகத்தினில் அப்படியே தெரியுது.
நிசமான உன்முகம் மறையுது.
வசமான உன்னகம் நிறையுது.

எண்ணம் குளிர்ந்த உணர்ச்சியை.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை.
வண்ணம் கவர்ந்த நெகிழ்ச்சியை
சொல்லும் வதனம் மலர்ச்சியை.

இன்பம் துன்பம் எதுவானாலும்
எண்ணும் வண்ணம் இரண்டானாலும்
எழுதிச் சொல்லும் வெவ்வேறாய்
இதயம் பதித்த முகவுரையாய்.

கோபம் தாபம் கொந்தளிப்பில்
குழம்பிக் கிடக்கும் அவசரத்தில்
பாவம் புண்ணியம் தெளியாமல்
படும்முன் உணர்க முகவரியில்.

தெளியா மனதினில் தேடாதே!
விழியா உணர்விடம் கூடாதே!
புரியா மொழியதில் படிக்காதே!
அறியா முகத்துடன் தொடராதே!

கண்ணாடி முன்னின்று உனைத்தேடு
பின்னாடி பின்னன்று தனைக்கூடு.
எண்ணாடி ஒண்ணின்று உரம்தீட்டு.
நன்றென்று வாழ்கவே தரம்சூட்டு.

கொ.பெ.பி.அய்யா.

















No comments:

Post a Comment