Monday 7 April 2014

பணம்!

பணம் பணம்

பணம் இருந்தாலே மணம் மணம்!
பணம் இல்லேன்னா பிணம் பிணம்.
பணமும் குணமும் பொருந்தா உறவு—நாறப்
பிணமானாலும் பணமிருந்தாலே கணம் கணம்.

உண்டியல் இல்லா கோவில்கள் இல்லை
உள்ளவன் நுழைவான் சன்னதி எல்லை
தண்டியல் தங்கத்தில் இளித்திடும் பல்லை—சுமந்து
தூக்கவும் கேட்பான் கட்டண வில்லை.

கைகட்டி நிற்பான் பணமில்லா ஏழை.
கடவுளாய்த் தொழுவான் பணமுள்ள ஆளை.
அணுவும் அசையாது அவனன்றி வேளை—ஒரு
பணமின்றி இசையாது பழகியும் வேலை.

கூடுதல் பணமே கோட்டையை பிடிக்கும்.
கொள்கையை விற்றும் குடும்பத்தை வளர்க்கும்.
சத்தியம் எல்லாம் சவக்குழி தள்ளும்—எதையும்
சாதிக்கத் துணிந்தால் சர்வமும் கொல்லும்.

மரணத்தைக்கூட மயக்கம் ஆக்கும்.
வர்ணம் மாறியும் வனப்பில் பூக்கும்.
இன்று நடப்பதை என்றோ மாற்றும்---ஐயோ
ஒன்றுக்கு மாகாததை நன்றெனப் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா. 



No comments:

Post a Comment