Tuesday 18 February 2014

தனி உலகம்.

இது ஒரு தனி உலகம்

தலை விதி இதுதானா?
நிலை இது சரிதானா ?
விலையான காமத்தால்
விளைந்திட்ட பாவங்கள்
வீதியில் சருகாய்
விதியென திரிகின்றனர்.
கதியற்ற இவர்களை
கதி செய்வாரும் உண்டோ!

தொள்ளாயிரம் கோடியாம்!
தோழமை  மனிதச் சாதியாம்!
உள்ளுமோ கொடுமையாம்!
ஓட்டுமோ வறுமையாம்!

பள்ளி காணா பால சாபமோ!
பாவாடை எட்டா ஈனக்கோலமோ!
எள்ளி நகைக்கவும் இறையா
வருவான் பொருளா தருவான்?

மூடி மறைக்கத் துணிதந்தாலே!
தேடிப்பிழைப்பர் தன்னுழைப்பாலே!
ஓடி ஒளிய உயிர் இருந்தாலே!
கோடிப் பெண்மை தப்புந்தன்னாலே!

அனாதை இல்லங்கள் உண்டென்பார்!
அன்னை தந்தையரே அங்கிருப்பார்!
அனாதை  எல்லாம் தெருவிலே!
அது ஒரு உலகமாய்  உழலுதே!

ஓடில்லாத வீடு அடுப்பில்லாத சோறு.
பாடில்லாத நாடு பசியடங்கா ஊரு,
குளிக்கத் தெரியா பண்பாடாம்.
ஒளிக்கத் தெரியா நாகரிகமாம்.

அந்த உலகின் கீதம் இதுதான்
சொந்தம் தேடும் சோகம் இதுதான்.
படுக்க மட்டுமே இடம் கொண்டாடும்
பாவ உலகில் பசியே சொந்தம்.

அனா பின்னே ஆவனா தொடரும்.
அன்பின் பின்னே ஆதரவு தொடருமோ!

இனா பின்னே ஈயனா தொடரும்.
இரக்கத்தின் பின்னே ஈகை தொடருமோ!

உனா பின்னே ஊவனா தொடரும்.
உணர்வின் பின்னே ஊழியம் தொடருமோ!

எனா பின்னே ஏயனா தொடரும்.
எளிமையின் பின்னே ஏற்றம் தொடருமோ!

ஐயனா பின்னே ஐயமே தொடரும்.
ஐயம் பின்னே அதுவே தொடருமோ!

ஒனா பின்னே ஓவனா தொடரும்.
ஒழுக்கத்தின் பின்னே ஓகை தொடருமோ!

ஔவை பின்னே செவ்வை தொடரும்.
செவ்வை பின்னே செழுமை தொடருமோ!
அஃதின் பின்னே அமைதி தொடரும்.
அமைதியின் பின்னே ஆக்கம் தொடருமோ!



கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment