Tuesday 18 February 2014

இரவில் விடுதலை.

இரவில் விடுதலை இன்னும் விடியவில்லை!

இரவில்தான் விடுதலை
இன்னும் விடியவில்லை!
கனவில்தான் விடுதலை
கண்ணில் தெரியவில்லை!

காந்தியும் அறிவதற்குள்
காலனும் முடித்துவிட்டான்.
சந்தியோஅந்தியோ!
சந்திக்க எங்கே விட்டான்!.

பெற்றுக் கொடுத்தவரோ
சற்றும் கொஞ்சவில்லை!
விற்று எடுப்பவரே
உற்றதாய் நடிக்கிறார்.

பட்டகொடுமைகளோ!
கெட்ட கனவுகளோ!.
மிட்டாய் வழங்கவோ!
பெற்றார் விடுதலை!

யாருக்காக சுதந்திரம்?
ஊருக்கா?ஊழலுக்கா?
அரசியிலார்க்கா?ஆட்சிக்கா?
எளியோர்க்கா?வலியோர்க்கா?

அரசு அலுவலகங்களில்
விரசமான பேரக்காட்சிகள்.
அதிகார மையங்களில்
ஆங்கிலக் கொள்ளைகள்.

அலுவலகச் சாளரங்கள்
அங்கே காற்றுக்காகல்ல.
அவ்வப்போது சேருகின்ற
அன்பளிப்புக் கடத்தலுக்காக.

கையூட்டுப் புதுமுறையாம்
பையனைப் பார்க்கனுமாம்.
சைகைத் தகவலில்தான்
கையெழுத்தாகுமாம்.

சொத்து உனக்குத்தான்.
பட்டா பணத்துக்குத்தான்.
வித்தாலும் பங்குதான்
பத்திரம் பதியத்தான்.

விபத்து விகிதம் ஏறுது.
விலைக்கு உரிமம் கிடைக்குது.
அபத்தமான ஓட்டுனர்கள்
ஆபத்தான நாளிது.

வீதியெல்லாம் காவலகள்.
வேட்டையாடும் ஏவல்கள்.
கூசவில்லை கைநீட்டல்
நாசமாச்சு நாடு பொட்டல்.

சும்மாவா வந்தது சுதந்திரம்!
சொல்லி மாளுமோ சரித்திரம்!.
கரையான்கள் அரித்திட
கரையுதோ!ஒழியுதோ!பாவமே!

இன்னொரு மகாத்மாவும்
இங்கு வந்து பிறப்பாரோ!
பின்னொரு சுதந்திரமும்
பெற்று உயிர் பிழைப்பாரோ!


கொ.பெ.பி.அய்யா.
                             









No comments:

Post a Comment