Tuesday 18 February 2014

இயற்கை அழுகிறது.

இயற்கை அழுகிறது!

என்னை மட்டும் பழிக்காதே!
உன்னை விட்டும் விலக்காதே!
முன்னை ஆய்ந்த அறிஞர்களும்
சொன்னதையும் மறக்காதே!

இயற்கை நானே அழுகிறேன்!
என்னை நீயே வதைப்பதால்!
செயலிழந்தேன் என் செய்வேன்
சிதைகிறேனே உன்னோடே!

ஊழிக்கால  மழையதுதான்
உணரத்தான் கேத்ரிநாத்!
இமயத்தின் பேரலையாய்
இயற்கை எனது எச்சரிக்கை!

காடழித்து வீடமைத்தாய்!
கேடதுதான் கேத்ரிநாத்!
வீடெழுந்தும் சரிந்ததோ!
விபரீதம் புரிந்ததோ!

மின்சார  உற்பத்தியால்
விண் சேர்ந்த தூசியால்
தண்ணோசோன் கிழிந்ததோ!
விண்ணழுது அழிந்ததோ!

சமநிலை இழந்ததேனோ!
எமநிலை ஆனேனோ!
இனியேனும் உணர்வாயோ!
இயற்கையை மதிப்பாயோ!

வெப்பம் தினம் உயர்கிறது!
தப்பாகிறது  பருவங்கள்!
ஆழிகள் பெருக்காகும்!
பேரலைகள் ஊரழிக்கும்!

கொதித்த ஆதி பூமியை
குளிர்வித்த கொட்டுமழை!
விதித்த விதி அதுவானால்
வெள்ளம்தான் உச்சநிலை!

உலகம் மட்டும் சுழலாம்!
உயிர்கள் மட்டும் வாழாது!
புத்துலகம் வளர்வதற்கும்
புல்லுங்கூட மிஞ்சாது!

எவர் இதனை பாடவில்லை
இவனின்று பாடிவிட்டான்!
கவனித்தால் நலமுண்டு!
காலத்தின் துணையுண்டு!

கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment