Tuesday 18 February 2014

வீடொன்று சொந்தம் வேண்டும்.

வேண்டும்! வேண்டாம்!.

வீடொன்று சொந்தம் வேண்டும்.
காடழித்து வீடு வேண்டாம்
கழனிசெய்யக் காணி வேண்டும்.
காணியொழி மனைகள் வேண்டாம்.

நதிகளல்லாம் இணைய வேண்டும்.
நாட்டிலினி பஞ்சம் வேண்டாம்.
நாடொன்றாய் ஆகவேண்டும்.
நமக்குள்ளே சண்டை வேண்டாம்.

வேளாண்மை வாழ வேண்டும்.
ஆளாண்மை வீழ வேண்டாம்.
தொழிலாண்மை பெருக வேண்டும்.
தூரம்போமை மறுக வேண்டாம்.

தானியங்கள் பெருக்க வேண்டும்.
தரிசாதல் நெருக்க வேண்டாம்.
ஏற்றுமதிச் சிறக்க வேண்டும்.
இறக்குமதித் திறக்க வேண்டாம்.

கிராமங்கள் செழிக்க வேண்டும்.
கிரமமதை மழிக்க வேண்டாம்.
பட்டிகள் நிலைக்க வேண்டும்
பட்டணம் நினைக்க வேண்டாம்.

அரசியல் தொடர வேண்டும்.
விரசியல் படர வேண்டாம்.
கட்சிகள் சுருக்கு வேண்டும்.
காழ்ப்புணர்க் குறுக்கு வேண்டாம்.

மேடைமொழிப் பேச்சு வேண்டும்.
பேடையிழிக் கூச்சல் வேண்டாம்.
செதுக்கு உறைச் சீர்மை வேண்டும்.
வெதுப்பு முறைச் சோர்மை வேண்டாம்

பொதுவுநலத் தூய்மை வேண்டும்.
பதுக்குமலப் பேய்மை வேண்டாம்.
எதிர்ப்பு நிறை வாய்மை வேண்டும்
குதர்க்கத் துரைத் தீய்மை வேண்டாம்.

கொள்கையிற் திடம் வேண்டும்.
கொள்வதில் மடம் வேண்டாம்.
வெல்வதிற் செயல் வேண்டும்.
கொள்வதில் மயல் வேண்டாம்.

அன்புள்ளம் இருக்க வேண்டும்.
அன்பில்லம் முளைக்க வேண்டாம்.
தன்னிறைவு ஆக்க வேண்டும்.
பொன்விழைவுப் பூக்க வேண்டாம்.

தன்மனைக் காதல் வேண்டும்.
பிறன்மனைத் தேடல் வேண்டாம்.
சன் மார்க்கப் பாதை வேண்டும்.
வன்னோக்கப் போதை வேண்டாம்.

தேவைகள் சமம் வேண்டும்.
காவல்கள் சேமம் வேண்டாம்.
ஆசைகள் நலம் வேண்டும்
அடைபாவத் தூபம் வேண்டாம்,

நியாயங்கள் நெஞ்சில் வேண்டும்.
நீதிமன்றம் நாட வேண்டாம்
சத்தியம் போற்ற வேண்டும்.
சட்டங்கள் ஏற்ற வேண்டாம்.

அனைவர்க்கும் கல்வி வேண்டும்.
அதுபேரம் ஆக வேண்டாம்.
வாழவொரு வேலை வேண்டும்.
ஆனபின் ஊழல் வேண்டாம்.

உழைப்பதில் உண்மை வேண்டும்.
பிழைப்பதிற் சிறுமை வேண்டாம்.
கடமையிற் திண்மை வேண்டும்.
உடமையில் வன்மை வேண்டாம்.

வேதங்கள் படிக்க வேண்டும்.
பேதங்கள் பேச வேண்டாம்
பண்பினைப் பழக வேண்டும்.
பாவங்கள் நிலவ வேண்டாம்.

கொண்டதிற் பற்று வேண்டும்.
பணடதிற் அற்று வேண்டாம்.
தொண்டதிற் கட்டு வேண்டும்.
மண்டதிற் கெட்டு வேண்டாம்.

சமுதாயம் ஒன்று வேண்டும்.
சாதிகள் என்று வேண்டாம்
பேசவொரு மொழி வேண்டும்.
பிறமொழிகள் இழி வேண்டாம்.

காதல் மண்ணில் மீள வேண்டும்.
சாதி மதம் ஆள வேண்டாம்.
மனிதம் கண்ணில் ஒளிர வேண்டும்.
மடமை நெஞ்சில் துளிர வேண்டாம்.

சமத்துவம் அடைய வேண்டும்.
சலுகைகள் விழைய வேண்டாம்.
எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்.
இல்லாமை இருக்க வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment