Monday 17 February 2014

சுதந்திரம் யாருக்கு?

யாருக்குச்சுதந்திரம்?

யாருக்குச் சுதந்திரம்-
யாருக்குச் சுதந்திரம்?
ஊருக்குள் கேட்டேன்
இல்லை இல்லை
ஊமைகளிடமே கேட்டேன்

அவர்களுக்குப் பாவம்
விடைசொல்லத் தெரியவில்லை!
அதனால் அந்த
வெள்ளையனிடமே கேட்டேன்.

அவன் சொன்னான்,
"காந்திக்குப் பயந்துதான்
சுதந்திரம் கொடுத்தோம்
அதனால்தான் அதைப்பார்த்து
நீங்களும் பயப்படுகிறீர்கள்"-என்று.

கலங்கித்தான் கொடுத்தான்
அதனால்தான் நாடு இன்னும்
தெளியவே இல்லை.!

அன்று அவன் விதைத்த குண்டுகள்
இன்றும் வெடித்துக் கொண்டுதான்
இருக்கின்றன.

கொள்கைகள் குண்டுகளால்தான்
பேசப்படுகின்றன.
அந்நியன் அன்று நம்மை அடித்தான்.
இன்று நாமே அடித்துக்கொள்கிறோம்.

அவன் விதைத்த விதைகள்
இன்னமும் மடியவே இல்லை.

சமயங்களால் பேதங்கள்,
சாதிகளால் வேற்றுமைகள்,
மொழிகளால் மாச்சர்யங்கள்.
இவைகள்தான் நம்க்கு
அவன் வைத்துப் போன சூன்யங்கள்.

உயிர்களை விதைத்து
உதிரத்தால் பாத்திகட்டி
வளரத்த சுதந்தரப் பயிரின்று
வாடிக்கருகி வதங்கி
நச்சுப் புகையில் மூழ்கி
மூச்சுவிடத் திணறுகிறது பாவம்!

இது கண்டு நாமும்
வருந்துவோமா-வருந்தித்தான்
திருந்துவோமா?

வளங்களை எல்லாம் அவன்
வாரிக்கொண்டா போனான்?
செல்வங்களைத்தானே பாவி
கொள்ளையடித்துப் போனான்.
வறுமையையே நமக்கு
வைத்துவிட்டுப் போனான்.

இழப்பைச்சரி செய்து
இந்தியாவை  இந்தியாவாக்குமுன்
தந்தை மகாத்மாவை சண்டாளன்
அந்திமம் ஆக்கிவிட்டானே!

இந்தியாவை உருவாக்கிய
மந்திரத்தைத் தொலைத்துவிட்டோம்!
பந்தி விரித்தன தொந்திப் பேய்கள்.
மிஞ்சிய கொஞ்சமும் கபளிகரமானது.

வறுமை சாகவில்லை !
வறுமையை பேசினார்கள்!
வறுமை ஓட்டும் திட்டமெல்லாம்
கருமை ஆடுகள் மேய்ந்தன!
தெருவெல்லாம் கட்சிகளே
உருவாகி ஊளையிடுகின்றன!

வாரிச் சென்றான் அந்நியன்!
வாரிசாட்சிக்கே இன்னும்
வகை செய்கிறான் இந்தியன்!
மீண்டும் அடிமைப்படவே
ஈண்டு விழைகிறோம்!

வாரிசு அரசியல்கள் வாழவே
வறுமை இங்கே வாழ்கிறது!
வளரும் நிலை வாழும் வரைதான்
வாரிசுகளும் வாழும்,ஆகவே
வாரிசு முறையே வளரும்!

வறுமைக்குள் தள்ளப்பட்ட
ஜப்பான் தலைதூக்கவில்லையா?
ஒன்றுபட்டு உழைத்தார்கள்
உயர்ந்தார்கள்.

பேதங்களுக்கும் வேற்றுமைகளுக்கும்
மாச்சயர்ங்களுக்குமா சுதந்திரம்?
அவைகளால் பசி போனதா?
வறுமை ஒழிந்ததா?வல்லரசானதா?

பாதுகாப்புச் செலவினமாக
பல்லாயிரம் கோடிகள்
நமக்குள் நாமே ஒன்றுபட்டால்
நமக்கு எதற்கு பாதுகாப்பு?

இந்தியாவுக்குள் இருந்து கொண்டே
இந்தியருக்கு தண்ணீர் தர
மறுக்கிறார்கள்.

இந்தியாவின் சொத்துக்கள்
இந்தியர்க்கெல்லாம் பொதுதானே.
இவர்களுக்கு மட்டுந்தான் சுதந்திரமா?

நீதிமன்றங்களை அவமதிக்கவும்
நீளுகிறதா சுதந்திரம்?

ஓட்டுப்போடத்தான் சுதந்திரம்
ஓட்டுக்குப் பணம் தரவா சுதந்திரம்?

ஊழியம் செய்யச் சுதந்திரம்
ஊழல் செய்யவா சுதந்திரம்?

காதல் செய்யச் சுதந்திரம்
கற்பழிக்கவா சுதநிரம்?

சொத்து வாங்கச் சுதந்திரம்.
சுரண்ட இல்லை சுதந்திரம்.

யாருக்குச் சுதந்திரம்?
ஊருக்குச் சொல்லுங்கள்.

சமத்துவ இந்தியாவை
சமைக்கவே சுதந்திரம்
ஒன்றுபட்டு வாழுவோம்
உயரத்துவோம் இந்தியாவை.


கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment