Tuesday 18 February 2014

வந்தே மாதரம்.

வந்தே மாதரம் மந்திரம்!!

ஆறு பத்து ஆறு ஆண்டுகள்
ஆகித்தான் கடந்து போனாலும்
இனியொரு சுதந்திரம் விழைகிறோம்.
எழுப்பித்தான் காந்தியை அழைக்கிறோம்.

பணத்தின் தாகம் ஊழல் மோகம்.
இனத்தின் மோகம் தீவிரவாதம்.
கணத்தின் மோகம் பிரிவினை பேதம்
குணத்தில் போகம் மாறி விளையுமோ!

இந்திய ஒருமையும் நீர்த்துப் போனதோ!
சிந்திய இரத்தமும் காய்ந்து ஆனதோ!
பிந்திய இன்றும் சிந்தியும் வீணே!
அந்நியம் பேசி பிரிவதும் ஏனோ!

பரந்த தேசத்தின் விரிந்த ஆளுமை!
சிரமத் தீர்வே குறைந்த ஆளுகை!
நிறைந்து மாநிலம் வளரும் சீருமை!
புரிந்த மொழியில் ஆள்வதே அருமை!.

இன்னும் ஏனோ மேலும் பிரிவினை!
என்ன பெருமை இதனின் செய்வினை!
நன்னும் வலிமை இழியும் இவ்வினை
பின்னும் வேண்டாம் உணர்வீர் திருவினை!

நச்சாகிப்போனதோ நம்முன் நாகரிகம்!
இச்சைப்படுமோ பச்சை இரத்தமும்!
கொச்சைப்படுமோ சுதந்திர யோகம்!
மிச்சமாகுமோ இந்திய தேசம்!

அன்னிய மோகம் சூன்ய மேகம்!
அதனால் ஆவதோ அடிமை சோகம்!
எண்ணிடக் கொதிக்கும் குருதி வேகம்!
பின்னிட வேண்டாம் இனியொரு சாபம்!

சில்லரைத் தொழில்கள் சிதைந்தும் போனால்
வல்லார் ஆதிக்கம் வளர்ந்தும் ஆனால்
இல்லார் என்றால் இந்தியர் என்றே
சொல்லுங் கேவலம் சுதந்திரமாகும்.

நாடு விட்டு நாடுகள் அலையும்!
கூடு கட்டி விட்டுமே பறக்கும்!
தேடுவது தேடி வீடு திரும்பும்!
வீடு இருக்கும் சோடி மறக்கும்!

சொந்த நாட்டின் பணத்தில் படிப்பார்.
சென்ற நாட்டின் மணத்தில் துடிப்பார்,
மனித வளங்களை மாற்றார்க்கிறைப்பார்.
இனியும் அடிமை மோகம் நிறைப்பார்.

பேதமை உணர்வு வேதனை ஊழல்
ஏதங்கள் அழிந்து எந்நாள் விடியும்?
சாதனை அதுதான் சாதிக்க முடிந்தால்
சோதனை யாவும் தீர்ந்தே முடியும்.

என்று தணியுமந்த சுதந்திர தாகம்!
என்று தணியுமிந்த அடிமை மோகம்!
என்று உணருமந்த பிரிவினை வேகம்!
என்று ஒழியுமிந்த பேதமை சோகம்!

ஒன்றே உணர்வு நன்றேயென்று,
இன்றே நின்று இந்தியனென்று,
வந்தே மாதரம் மந்திரமென்று,
கொண்டால் ஆவோம் வல்லரசென்று.


கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment